விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி... சாதித்த அஜித்குமார்..!
ஒரு புறம், சினிமாவில் கலக்கி வந்தாலும், மறுபுறம் பல வருடங்களுக்குப்பிறகு கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கி இருக்கும் நடிகர் அஜித் குமார்... அதற்கான ஏராளமான பயிற்சிகளை எடுத்ததுடன், துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் போட்டியிலும் ‘அஜித் குமார் ரேஸிங்க்’ என்ற சொந்தமான ஒரு அணியை உருவாங்கி பங்கேற்றார்.
பயிற்சியின்போது அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானாலும், தற்போது, அவரது அணி 992 பிரிவு கார் பந்தயத்தில் 3 ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.
வெற்றியை தனது அணியுடன் துள்ளிக்குதித்து கொண்டாடிய அஜித்தின் முகத்தை கண்ட ரசிகர்கள், “ மனுஷ முகத்துல இப்படி ஒரு சிரிப்ப பார்த்ததே இல்லீங்க’ என்று உணர்ச்சிப் பொங்க பதிவுகளை இட்டு பாராட்டி வருகின்றனர்.
வெற்றிபெற்ற பிறகு ரேசிங் சர்க்யூட்டில் வலம் வந்த அஜித் குமார் தனது அணியை உற்சாகப்படுத்தியதுடன், தனது உடையில் இருந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவையும் பெருமையாக காட்டினார். மேலும், இந்தியக் கொடியை பெருமையுடன் தூக்கி காட்டுவதிலேயே அவரது கவனம் முழுவதும் இருந்தது என்பதில் சிறுதும் சந்தேகம் இல்லை.
வெற்றிபெற்ற பிறகு தனது மனைவி , மகள் , மகனை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நடிகர் மாதவன் செய்த செயல்கள்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கார் ரேஸ் தொடங்கியதிலிருந்தே ரேஸ் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு கொண்டே இருந்த நடிகர் மாதவன், போட்டி நடைபெறும் களத்திற்கே சென்று அஜித்தை உற்சாகப்படுத்தினார் என்பதுதான் ஸ்வாரஸ்ய தகவல்.
கூட்டத்தோடு கூட்டமாக ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு அஜித்தின் வெற்றியை மிகுந்த சந்தோஷத்தோடு கூச்சலிட்டு ஆரவாரம் செய்த மாதவன், ‘உங்களை நினைத்து மிக மிக பெருமைப்படுகிறேன். என்ன ஒரு அற்புதமான மனிதர் நீங்கள்!! நீங்கள் ஒருவர் தான் அஜித் குமார் ’ என்று மகிழ்ச்சியுடன் தனது வீடியோவிலும் குறிப்பிட்டார்.
மேலும், மாதவனின் ரசிகர்கள் மாதவனை சூழ, ’நான் இப்போ அவரோட ஃபேன் பிரதர்... என்ன ஃபேனா இருக்க விடுங்க...’ என்று மாதவன் சொல்ல.. ‘ அஜித் உங்கள் நண்பர் மாதவன் இங்கே இருக்கிறார் ’ என்று அருகில் இருந்தவர்கள் கூச்சலிடத்தொடங்கினர்.
அப்போது, அங்கிருந்து சிரித்துக்கொண்டே ஓடிய மாதவன், இறுதியில் .. அஜித்தை ஆரத்தழுவி தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொண்டார்.
உழைப்பு, விடாமுயற்சி, விரும்பிய ஒன்றை அடைந்தே ஆக வேண்டும் என்ற உறுதி, அவ்வப்போது ரசிகர்களுக்கு கொடுக்கும் வாழ்க்கைக்கான அறிவுரைகள் என ஒரு நடிகனாக மட்டுமல்ல நல்லா மனிதனாகவும் சாதித்து காட்டிவிட்டார் அஜித் என்று சொன்னால் மிகையாகாது.