முடங்கிய ஏர்செல் நெட்வொர்க்: தடம் மாறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள்..!
முழுவதுமாக முடங்கியுள்ள ஏர்செல் நிறுவனம் சுமார் 15,000 கோடி கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதன் பல லட்சம் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் சேவைக்கு மாறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கிய ஏர்செல் வாடிக்கையாளர்களின் புலம்பல் சத்தம் இன்னும் தீரவில்லை. ஆம். ஏர்செல் இணைப்பில் இருந்து மற்றவர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மற்ற தொலைத்தொடர்ப்பு இணைப்புகளிலிருந்தும் ஏர்செல்லுக்கு கால் செல்வதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஏர்செல்.. இந்தியாவின் 6வது மிகப்பெரிய செல்போன் சேவை நிறுவனம். தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் 1999-ல் தொடங்கப்பட்ட ஏர்செல், தமிழகத்தின் கடைக்கோடி வரை மொபைல் சேவையை கொண்டு சேர்க்க உதவியது. கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் சூர்யா ஆகியோர் கூட ஏர்செல் நிறுவன விளம்பரங்களில் நடித்து அதனை பிரபலபடுத்தினார். இதனால் தமிழகத்தில் ஏர்செல்லுக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உண்டு. முன்னர் ஒரு காலத்தில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஏர்செல்லில் அதிக சலுகைகள் வழங்கப்பட்ட காரணத்தினால் அதற்காகவே ஏர்செல் சிம்கார்டுகளை பயன்படுத்தத் தொடங்கியவர்களும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிம்கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதனை மாற்ற அவ்வளவு எளிதாக மனம் வராது. எத்தனையோ சலுகைகளை வழங்கி புது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்தாலும் கூட ஏர்செல்லை மாற்றாமல் பயன்படுத்தும் பலரும் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அடிக்கடி மக்கர் செய்யும் ஏர்செல், நேற்று முழுவதுமாகவே முடங்கிப் போனதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை உள்பட இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏர்செல்லில் பணியாற்றும் 5000 பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏர்செல் நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுடன் இணையும் ஏர்செல்லின் முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டது. இச்சூழலில்தான் சேவை குறைபாடு தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, ஏர்செல் நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் அசவுகரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தற்போதைய சேவை குறைபாடு தற்காலிகமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.