பட்டாசு வெடிக்க புதிய விதி... மாசு குறைந்ததா சென்னையில்?
சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்திருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்து. ஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது
சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் காற்றின் தர அளவீட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதேபோன்று, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பிலும் காற்று தர அளவீட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காற்றில் உள்ள தூசி, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவற்றின் அளவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 65 குறியீடு அளவில் காற்று மாசு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திருப்திகரமான அளவு என்றும் டெல்லி 349 குறியீடு அளவில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் சென்னை தி.நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. ஆய்வு நிறைவடைந்த பின் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் காற்றில் கலந்திருக்கும் pm 2.5, pm 10 ஆகிய நுண் துகள்கள், சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவுகள் தெரிய வரும். இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்க இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் காற்று மாசு ஓரளவிற்கு குறைய வாய்ப்புள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்