திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா செல்ல இருந்த விமானம் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் தினந்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு சென்று, மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் இன்று காலை 8.55 மணிக்கு வழக்கம்போல் திருச்சிக்கு வந்து இறங்கியது. மீண்டும் புறப்படுவதற்கான பணிகள் மேற்கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 87 பயணிகளும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இரவு 10.30 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழுதான விமானத்தை சரிசெய்ய, தொழில்நுட்ப வல்லுநர்கள் மலேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு சரி செய்து நாளை காலை நான்கு மணி அளவில் மலேசியா நோக்கி செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவித்தனர்.