நாங்கள் கொடுத்துவிட்டோம்; மத்திய அரசுதான் எடுக்கவில்லை: எய்ம்ஸ் குறித்து முதல்வர் விளக்கம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு சார்பில் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த போது முதல்வர் பழனிசாமி இதைக் கூறினார். இது குறித்து அவர் கூறும் போது “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டு இன்னும் நிலத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை” என்று கூறினார்.
மேலும் அவரிடம் மின் சாரத்துறை தனியார்மயமாக்கல், சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், “மின் துறையை தனியார்மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியபிறகு, அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அரசிற்கு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவதில் ஆர்வமில்லையா என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.