அப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்..? : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்

அப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்..? : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்

அப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்..? : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்
Published on

எய்ம்ஸ் மருத்துவமனை தங்கள் பகுதிக்குத்தான் வரவேண்டும் என தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் கோரிக்கை வைத்த நிலையில், மதுரைக்கு எய்ம்ஸ் வருவது உறுதியாகி உள்ளது. ஏன் மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை விரும்புகிறார்கள்? என்ன இருக்கிறது எய்ம்ஸ்சில்? தெரிந்து கொள்வோம்.

அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவக் கல்வியையும் ஒரே இடத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1956-ஆம் ஆண்டில் டெல்லியில் தொடங்கப்பட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சுருக்கமான பெயர்தான் எய்ம்ஸ். இப்போது இந்தியாவில் 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இன்னும் தமிழகம் உள்ளிட்ட 12 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எய்ம்ஸ்சில் மக்களுக்கு நோய் சிகிச்சைகள் அளிக்கப்படுவதோடு, மருத்துவக் கல்வியும், எதிர்கால நோய்களின் தடுப்பு குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய சுகாதாரத்துறையின் நேரடியான கட்டுப்பாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்காக 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை மத்திய அரசு செலவழிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்காக தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தரமான மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியத் தடை உள்ளது. இந்த மருத்துவர்களுக்கான வீடுகள் மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்படுகின்றன.

உலகத் தரத்திலான சிகிச்சைகள் ஏழைகளுக்கு இலவசமாகவும், மத்தியதர மக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திலும் எய்ம்ஸ்சில் வழங்கப்படுகின்றன. ஓராண்டு முழுவதும் எய்ம்ஸ்சில் சிகிச்சை பெற ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் ஆண்டுக் கட்டணம் செலுத்தினால் போதுமானது. எய்ம்ஸில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக் கட்டணமாக 25 ரூபாய், நாள் வாடகை 35 ரூபாய் செலுத்தினால் போதும். ஏழைகளுக்கு இவை அனைத்தும் இலவசம். வசதியான வார்டுகளை வேண்டுவோருக்கு எய்ம்ஸ்சில் ஏ கிளாஸ், பி கிளாஸ் வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு தலா 1,700 ரூபாய் மற்றும் 1,100 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் கூட உடல்நலக் குறைவின் போது எய்ம்ஸ் மருத்துவமனைகளில்தான் அனுமதிக்கப்படுகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாஜ்பாய் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் இந்தியாவின் முதல் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது, முதல் செயற்கைக் கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது. இப்படிப் பல சிறப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழகத்தின் மருத்துவத் தரம் உயரும் என்று ஒரு தரப்பினர் கூறும் அதே வேளையில், எய்ம்ஸில் படுக்கை வசதிகளும், அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவு என்பதால், அனைவருக்கும் அது பலனளிக்காது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com