‘யாரப்பா நீ? தைரியமிருந்தால் தனிக்கட்சி நடத்திப் பார்!’ - இபிஎஸ்க்கு ஓபிஎஸ் விடுத்த சவால்

‘யாரப்பா நீ? தைரியமிருந்தால் தனிக்கட்சி நடத்திப் பார்!’ - இபிஎஸ்க்கு ஓபிஎஸ் விடுத்த சவால்
‘யாரப்பா நீ? தைரியமிருந்தால் தனிக்கட்சி நடத்திப் பார்!’ - இபிஎஸ்க்கு ஓபிஎஸ் விடுத்த சவால்

சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அ.தி.மு.க. எதிர்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், ‘உனக்கு தைரியமிருந்தால் தனிக்கட்சி நடத்திப் பார்... வீதிக்கு வந்தால் எங்குபோய் விழுவாய் என்று உனக்கே தெரியாது’ என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மூலம் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு நிர்வாகிகளும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்ட நிலையில், தற்போதும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாகக் கூறி புதிய நிர்வாகிகளை அறிவித்து வரும் பன்னீர்செல்வம், சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தால் அறிவிக்கப்பட்ட 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 100 தலைமை கழக நிர்வாகிகள் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது மேடையில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், “ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வானேன். என் சோகத்தை அவர்களே தாங்கிப் பிடித்து வருகின்றனர். அ.தி.மு.க. சாதாரண கட்சி கிடையாது, நெருப்பில் பூத்த மலர். லஞ்சப் பேர்வழிகளை தோலுரித்து, தமிழர் நலன் காத்தக் கட்சி.

1972-ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கியது ஏழை எளிய மக்கள் நலன் காணவே. மக்கள் துணையுடன் 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை நடத்தினார். 30 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்து செயலாற்றியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். மறைவின்போது 18 லட்சம் உறுப்பினர்களாக இருந்த நிலையில், ஒன்றரை கோடி தொண்டர்களுடனான இரும்பு கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றினார் ஜெயலலிதா.

சுதந்திரமடைந்தப் பிறகு தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. மட்டுமே. எம்.ஜி.ஆர். வகுத்த விதிப்படியே ஜெயலலிதா செயல்பட்டார். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என்ற நிலையை இரு பெரும் தலைவர்களும் உருவாக்கினர். மனிதாபிமானம் கூட இல்லாத சர்வாதிகார உச்சநிலையில் இருந்து கொண்டு நான் வகுத்ததுதான் சட்டம் என்று கூறுகிறார்கள். இன்று அவர்கள் தோற்றுப்போய் கட்சி தொண்டர்களிடம் செல்வாக்கை இழந்துள்ளனர். கட்சி விதிகளை திருத்திய மாகாபாவிகளை தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள்.

திரைப்படங்களில் நெற்றியில் கூட உதய சூரியனுடன் நடித்தவர் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆரை மாவட்ட செயலாளர்கள் கூடி நீக்கினர். அதனால்தான் தொண்டர்களால் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதியை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்., ஆனால் இன்று இடைக்கால பொதுச்செயலாளர் என்கிறார்கள். அதற்கென தேர்தல் நடத்துவார்களாம். 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்து , 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தால்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியுமாம். சாதாரண தொண்டர்கள் எப்படி போட்டியிட முடியும். அந்த ஜனநாயக படுகொலையை தடுக்கும் சக்தி நாம். எங்கள் உயிரே போனாலும் கழக சட்ட விதியை திருத்த விட மாட்டோம். தொண்டர்களுக்குதான் தலைமையை தேர்வு செய்யும் அதிகாரம் இருக்கும்.

இன்று சில பணக்காரர்களிடம்தான் அ.தி.மு.க. இருக்கிறது. என்ன மணி அடித்தாலும்... ' பப்பு வேகாது...'. இங்கு எழுவதுதான் மக்கள் குரல்... என்ன தைரியம் அவர்களுக்கு...?. உனக்கு தைரியமிருந்தல் தனிக்கட்சி நடத்திப் பார்... வீதிக்கு வா.. எங்குபோய் விழுவாய் என்று உனக்கே தெரியாது. ஜூன் 23-ம் தேதி நான் பொதுக்குழுவிற்கு செல்ல முடியாதவாறு தடையை ஏற்படுத்த முயன்றனர். சாலையில் செல்லும்போது 40 நிமிடம் ஒரே இடத்தில் நான் நின்றேன்.

அவருக்கு 8 இடத்தில் வரவேற்பு கொடுத்தனர். 200 ரூபாய் கொடுத்து கூட்டி வரப்பட்ட கைக்கூலிகள் மாறி மாறி மீண்டும் மீண்டும் ஒரே மாலையை போட்டனர். யாரப்பா நீ..? கட்சியை வளர்த்தியா..?, எம்.ஜி.ஆர். - ஐ நேரில் பார்த்திருப்பியா..?. பொதுக்குழுவில் அவைத்தலைவரை நான் முன்மொழிந்தப்பிறகு, உலக மகா சட்ட மேதை சிவி சண்முகம் எழுந்து வந்து பொதுக்குழுவை ரத்து செய்வதாக கூறினார்.

256 கோடி வரை தலைமை நிலைய வங்கிக் கணக்கில் நிதி இருந்தது. இவை தொண்டர்கள் வழங்கிய சந்தா, உறுப்பினர் படிவ பணம். வங்கிக் கணக்கை அவர்கள் முறையாக செலவழிக்கவிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தம்பி பாதை மாறி சென்றால், ஊர் வந்து சேராது என பல முறை பழனிசாமியிடம் கூறி உள்ளேன்.

சசிகலா, தினகரனுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் தர்ம யுத்தம் நடத்தினேன். 36 சட்ட மன்ற உறுப்பினர்கள் டிடிவி வீட்டுக்கு சென்றபோது, தங்கமணி - வேலுமணி என் வீட்டிற்கு ஓடிவந்து அண்ணன்..அண்ணன் ... தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆட்சி கலைந்துவிடும். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்கள். அப்போது என்னிடம் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

நான் ஆட்சியை கவிழ்த்திருந்தால் எங்களுக்கு தற்காலிக மகிழ்ச்சி அப்போது கிடைத்திருக்கும். ஆனால் அம்மா ஆட்சியை கவிழ்த்ததாக தீர்க்க முடியாத அழுக்கு என் மீது படிந்திருக்கும்... எனவே அதை செய்யவில்லை. நான் பழனிசாமியிடம் கோடி கோடியாக பணம் கேட்கவில்லை , துணை முதல்வர் பதவி டம்மி என எனக்கு தெரியும், எனவே வேண்டாம் என்றுதான் சொன்னேன். பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நடத்த உதவியதால் அவர் கூறியபடி அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.

சசிகலாவிடம் என்னைப் பற்றி என்ன என்ன சொன்னார்கள் என இப்போதுதான் தெரிய வந்தது, நான் நிரந்தரமாக முதலமைச்சர் பதவியில் இருக்க முயற்சிப்பதாக கூறி உள்ளனர். நான்கரை ஆண்டில் ஆட்சி நடைமுறையில் நான் ஏதாவது தவறு செய்திருந்ததாக கூறினால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார். நான்கரை ஆண்டுகள் என்னை வருத்திக் கொண்டு அங்கு இருந்தேன். ஒன்னே ஒண்ணு கண்ணே கண்ணுணு தேனியில் மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். மத்திய அமைச்சர் பட்டியலில் ரவீந்திரநாத் பெயர் இருப்பதாக பா.ஜ..க தொலைக்காட்சியில் அன்று மாலை செய்தி வந்தது. பழனிச்சாமி அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி அதை தடுத்தார்.

இப்போது வாரிசுகள்தான் அமைச்சர்களாகி, பிறகு முதலமைச்சர்களாகி விடுகின்றனர். ஜெயலலிதாவிடம் பணி செய்வது சுற்றி எரியும் தீ-க்கு நடுவில் நிற்பது மாதிரி இருக்கும், சொன்ன பணியை 100 சதவீதம் சரியாக செய்ய வேண்டும், இல்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவார். 18 ஆண்டு அவருடன் இருந்தேன். என்னை பதவி இறக்கமோ , நீக்கமோ செய்ததில்லை. கொடுத்தப் பணிகளை சரியாக செய்து கொடுத்தேன். இப்போதும் நாள் தோறும் அவர் படத்தில்தான் கண் விழிக்கிறேன்.

என்னால் ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க முடியுமா என்றார்கள்... இன்று இத்தனை பேரை நியமித்துள்ளேன். உச்சநீதிமன்றம் சென்று இப்போது தர்ம யுத்தத்தை நடத்துகிறோம், உறுதியாக நீதிமன்றத்தில் நாம் வெற்றி பெறுவோம். தர்மயுத்தத்தில் என்னோடு நின்றவர்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என என் மீது பழிச்சொல் இருந்தது. கட்சிக்காக நான் செய்த தியாகத்தால் அப்படியான நிலை ஏற்பட்டது, அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நாளை அதிமுகவிற்கு ஒரு தொண்டன்தான் தலைவனாக வருவார்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com