அதிமுக ஒன்றிணைந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ இல்லையென்றால் ஜீரோ – வைத்திலிங்கம் பேட்டி

அதிமுக ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ இல்லாவிட்டால் ஜீரோ என சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
vaithilingam
vaithilingampt desk

சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ பாண்டியன், பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் பேசியபோது.. இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என கோர்ட்டில் கூறியுள்ளனரா? தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் இபிஎஸ் அணிக்கு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு அடுத்த மாதம் வர உள்ளது. அதுவரை கொடியையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.

EPS OPS
EPS OPSpt desk

அதிமுக ஒன்றுபட வேண்டும். அதுதான் எங்களின் எண்ணம். இபிஎஸ்-க்கு, மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணமில்லை. தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற அதிமுகவை கேடயமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். எடப்பாடியிடம் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் இடையே புரட்சி வெடிக்கப் போகிறது. நிச்சயமாக நாங்கள் ஒன்றிணைவோம். எடப்பாடி பழனிசாமி எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம். எங்களுடன் ஒன்றிணையாவிட்டால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு அதிமுகவை வலுப்படுத்துவோம்.

சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கூடிய விரைவில் சேலம் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேதி அறிவிக்கும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் மாநாட்டை நடத்தி முடிப்போம். அதிமுக மதுரை மாநாட்டிற்கு முன்னால் சேலம் மாநாடு நடைபெறும். ஓபிஎஸ் விலகிய பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை வல்லவர் என்றும் இவருக்கு வாக்களியுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

ttv dhinakaran
ttv dhinakaranpt desk

பிறகு தேர்தல் நின்றது. டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அரசியலில் பிரிந்து செல்வதும், இணைவதும் சகஜமான ஒன்று. அதுபோல கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கட்சியில் சுயநலம் என்றால் எடப்பாடி நினைப்பது போல் இணையாமல் போகலாம். ஆனால், நாங்கள் நினைப்பது இணைய வேண்டும் என்பதுதான்.அனைவரையும் ஒன்றிணைந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கும். பொதுச் செயலாளர் பதவி இருக்காது. சட்ட விதிப்படி நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா தான். ஓபிஎஸ் சொன்னது போல சசிகலாவை சந்திப்பார். சசிகலா மீண்டும் கட்சிக்கு வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும், எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைந்தால் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள்.

சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து மக்களின் நலன் கருதி பதவி குறித்து முடிவெடுப்பார்கள். திருச்சி மாநாட்டில் மூன்று லட்சம் பேரை ஒன்றிணைத்து தொண்டர்கள் எங்கள் பக்கம் என்று நிரூபித்தோம். தொண்டர்களிடையே கடுமையான எழுச்சி இருந்தது. கொங்கு மண்டலத்தில் அதேபோன்று எழுச்சியை சேலத்தில் காட்ட வேண்டும் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சியாக அமையும். எடப்பாடியில் கூட்டம் நடத்த சென்றபோது காவல் துறையினரின் ஆதரவுடன் கொடி கட்டுவதை தடுத்து இருக்கிறார்கள்.

Sasikala
Sasikalapt desk

எங்களை மிரட்டுவது தொடர்ந்தால் எடப்பாடி பழனிசாமி எந்த பகுதிக்கும் செல்ல முடியாது. எங்களால் எதையும் செய்ய முடியும். ஆனால், ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியாக எங்களது கருத்துக்களை கூறுங்கள். ஆனால், உங்கள் ஊருக்கு வரும்போது 10 பேரை வைத்து பயமுறுத்த ஒரு முன்னாள் முதல்வர் நினைப்பது அவருக்கான அழகும் இல்லை, தகுதி இல்லாமல் முதல்வராக இருந்து விட்டார் என்பதுதான். எதையும், எடப்பாடியையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதிமுக ஒன்றிணைந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ இல்லையென்றால் ஜீரோ-தான் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com