எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்.. வெளியேறிய பின்னணி என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு சென்றது அதிமுக. இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறோம் என எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத்தலைவர்கள் போர் கொடித்தூக்கினர். ஆனாலும், அதை சமாளித்து கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார் கே. பழனிசாமி.
எனினும், அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவருகின்றனர். அந்தவகையில் தான், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, மத்ராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் முதன்முதலாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெக இணைந்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். தொடர்ந்து, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ-வுமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.
இந்தசூழலில், அதிமுகவின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர் கட்சி மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைந்தார். அவரும், தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. இந்த நிலையில் தான், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்திருக்கிறார். சபாநாயகரும், அவரது ராஜினாமா கடித்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளருக்கு எதிராக போர் கொடி தூக்கியதன் காரணமாக அவரது மாவட்டச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. திரும்பவும் கே. பழனிசாமிக்கு ஆதரவளித்த போதிலும், அவருக்கு பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் கொடுக்கப்படவில்லை. இந்தசூழலில் தான், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, 4 பேர் தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், சி. விஜய பாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

