
அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு, அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்றிரவு திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு மீது பொது இடத்தில் ஆபாச வார்த்தை உச்சரிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களிலும் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் குமரகுருவிற்கு வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் போஸ்டர்களை கிழித்தும் திமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு நேற்று நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.