`அதிமுக ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?’- ஜெயக்குமார் பதில்

`அதிமுக ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?’- ஜெயக்குமார் பதில்
`அதிமுக ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?’- ஜெயக்குமார் பதில்

ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று விட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், நாளைக்கு மனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில் டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தும் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினர். இதுதொடர்பாக அதிமுக மூத்த தலைவர்களுடன் சந்தித்துவிட்டு, பின் கருத்து தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாகவே இப்போது அவரது வீட்டில் அவரை நாங்கள் சந்தித்தோம். சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து பேசினோம். ஆதரவு கேட்டு சந்திப்பு நடந்தது. இவைதவிர, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிடுவது கிடையாது. இன்று நடைபெற்ற பொதுக்குழுவானது, மிக எழுச்சியோடு நடந்த பொதுக்குழுவாகும்” என்றார்.

தொடர்ந்து இன்று காலை நடந்த பொதுக்குழு கூட்டம் குறித்து பேசுகையில், “பொதுக்குழுவின் ஒட்டுமொத்தமான முடிவு என்பது ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தான். ஈபிஎஸ் தான் தலைமையேற்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோள். அதன்படிதான் பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டது. ஈபிஎஸ் தலைமையை ஏற்பதற்காக ஓபிஎஸ் வீடு அருகில் பட்டாசு வெடிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது தொடர்பாக நான் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை" என்றார்.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com