“ ஜெயகோபாலை 3 நாட்கள் வைத்துவிட்டு ஜாமீன் கொடுத்துவிடுவார்கள்” - வழக்கறிஞர் தமிழ்மணி

“ ஜெயகோபாலை 3 நாட்கள் வைத்துவிட்டு ஜாமீன் கொடுத்துவிடுவார்கள்” - வழக்கறிஞர் தமிழ்மணி
“ ஜெயகோபாலை 3 நாட்கள் வைத்துவிட்டு ஜாமீன் கொடுத்துவிடுவார்கள்” - வழக்கறிஞர் தமிழ்மணி

சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் மூன்று நாட்களில் வெளியே வந்துவிடுவார் என்று வழக்கறிஞர் தமிழ்மணி கூறியுள்ளார்.

பேனர் மோதி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி விபத்து ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்றில் இருந்து அவர் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 

அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையினர் ஒருவரை தப்பிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், பொருந்தாத ஒரு வழக்கினை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்தால் மிகவும் குறைந்தபட்ச தண்டனையோ அல்லது எதுவும் இல்லாமலோ அவர்கள் வழக்கில் இருந்து வெளியேறிவிட வாய்ப்புள்ளது. 

அந்த வகையில், தொடக்கத்தில் வழக்குப் பதிவு செய்த போது பேனர் என்ற வார்த்தையே அவர்கள் குறிப்பிடவில்லை. நீதிமன்றம் தலையிட்டு அழுத்தம் கொடுத்த பின்னர்தான் வழக்கு துரிதமாக செல்கிறது. இருப்பினும், இந்த வழக்கு சட்டப்பிரிவு 304(2) என்பதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 304(2) பிரிவு அவருக்கு பொருந்தாது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் உள்நோக்கத்துடன் இந்த தவறை செய்யவில்லை என்பதையே இந்த வழக்குப்பிரிவு சொல்கிறது.

பேனர் மோதி அவர் சுபஸ்ரீ உயிரிழந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், பேனர் மோதி பின்னர் லாரியில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளதால் அதன் அடிப்படையில் 304(2) பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இவர் நேரடியான கொலைக் குற்றவாளியாக கருதப்படமாட்டார். கவனக்குறைவு என்பது மட்டும் அதிமுக பிரமுகர் மீதான குற்றமாக இருக்கும். மூன்றுநாட்கள் வைத்துவிட்டு ஜாமீன் கொடுத்துவிடுவார்கள்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com