`அதிமுக கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?’- ஓபிஎஸ்க்கு இபிஎஸ் தரப்பு நோட்டீஸ்?

`அதிமுக கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?’- ஓபிஎஸ்க்கு இபிஎஸ் தரப்பு நோட்டீஸ்?
`அதிமுக கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?’- ஓபிஎஸ்க்கு இபிஎஸ் தரப்பு நோட்டீஸ்?

அதிமுக கட்சியின் பெயர் அல்லது முகவரி அல்லது முத்திரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சியில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சனைக் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக அந்தக் கட்சி தற்போது பிரிந்து கிடக்கிறது. இருதரப்பும் மாறி மாறி, கட்சி நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர். மேலும் கட்சியை உரிமைக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

அதேநேரத்தில், தற்போதும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாகக் கூறி புதிய நிர்வாகிகளை அறிவித்து வரும் பன்னீர்செல்வம், சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘உனக்கு தைரியமிருந்தால் தனிக்கட்சி நடத்திப் பார்... வீதிக்கு வந்தால் எங்குபோய் விழுவாய் என்று உனக்கே தெரியாது’ என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியது பரபரப்பை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், அதிமுக கொடி மற்றும் பெயர் ஆகியவற்றை பயன்படுத்து தொடர்பாக விளக்கம் கேட்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளித்துள்ள நோட்டீசில், “11.07.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மூலம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ், 17.12.2022 தேதியிட்ட நோட்டீஸில் வேண்டுமென்றே "தலைமையகம் அறிவிப்பு" என்று போலியான பாணியில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என குறிப்பிட்டுள்ளீர்கள். இது முழுக்க முழுக்க கிரிமினல் செயல், சட்டப்படி தண்டனைக்கு உரியது” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி கட்சி அலுவலகம், எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக கட்சியின் பெயரையோ, அதன் முகவரியையோ அல்லது அதிமுக கட்சியின் லெட்டர் ஹெட் மற்றும் முத்திரையையோ பயன்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

மேலும் அதிமுக கட்சியின் தலைமையகத்தின் பெயரில் வெளியிடப்பட்ட சட்டவிரோத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடங்க நேரிடும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com