திட்டமிட்டபடி 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு: ஜெயக்குமார் உறுதி

திட்டமிட்டபடி 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு: ஜெயக்குமார் உறுதி

திட்டமிட்டபடி 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு: ஜெயக்குமார் உறுதி
Published on

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 12ஆம் தேதி நடைபெறும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் 12-ந் தேதி காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. 

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 11 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விதிமுறைபடி 5ல் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இருந்தாலே பொதுக்குழு கூட்டலாம். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டம் கூட்டப்படுகிறது. எல்லா பொதுக்குழு உறுப்பினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “பொதுக் குழு கூட்டம் கூட்டுவதில் எவ்வித விதிமீறலும் இல்லை. ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் உரிய நேரத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார். தன் கேள்விக்கு பதிலளிக்க முடியாதவர்கள் தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com