`இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது'- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் `இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது' என நீதிபதி தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர், புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகள் விசாரணை நடத்தி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் நீதிபதி ஜெயசந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
அத்தீர்ப்பின் படி, `அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். யாரும் தனி கூட்டம் கூட கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் தங்களின் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் இத்தீர்ப்பால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இத்தீர்ப்பின் மூலம் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்-ம் நீடிக்க உள்ளனர்.