"அதிமுகவை உரசிப் பார்க்க வேண்டாம்" - பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் பேச்சால் கொந்தளித்த ஜெயக்குமார்!

”அதிமுக நிர்வாகிகள் பாஜகவை விமர்சனம் செய்வதில்லை; பாஜக நிர்வாகிகளுக்கு ஏன் அந்த கட்டுப்பாடு இல்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக தலைமை சரியில்லை என்றும், அதிமுக ஐந்தாக உடைந்துள்ளதாக பாஜகவின் எஸ்.ஆர் சேகர் பேசியது குறித்து அண்ணாமலை பதிலளிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற கருத்துக்கள் பாஜக சார்பில் வராது, கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் எங்கள் கட்சியை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என அண்ணாமலை உறுதியளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி அண்ணாமலையில் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்.

அண்ணாமலை சொல்லி எஸ்.ஆர் சேகர் பேசுகிறாரா அல்லது சொல்லாமல் பேசுகிறாரா என்று தானே கேள்வி எழுந்திருக்கிறது. எனவே, 'எங்களுடைய பொருளாளர் எனக்கு தெரியாமல் ட்விட்டரில் இதுபோன்றதொரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அது தவறு. நான் அவரை கண்டிக்கிறேன்' என அண்ணாமலை பகிரங்கமாக உலகத்துக்கு ஊடகங்களுக்கு தெரிவிக்கவேண்டும். அப்படி தெரிவித்தால் தான் அண்ணாமலைமீது எங்களுக்கு சந்தேகம் இருக்காது. இல்லாவிட்டால் அண்ணாமலை சொல்லித்தான் அவர் சொல்கிறார் என்று நாங்கள் நினைக்கவேண்டி இருக்கும்” என்று பேசினார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியிருந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போதும், இபிஎஸ்க்கும் அண்ணாமலைக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிமுக குறித்து பாஜக கட்சியின் எஸ்.ஆர் சேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com