மேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக 

மேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக 

மேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக 
Published on

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலுக்கு அதிமுக மிகவும் மும்முரமாக தயாராகி வருகிறது. தேர்தல் தொடர்பாக நேற்று அதிமுக சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துடன் வரும் 24-ஆம் தேதி அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகவும் குறைந்த மாநகராட்சியில் மட்டுமே மேயர் பதவிக்கு போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. ஏனென்றால் மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சி, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 2 மேயர் இடங்களை கேட்பதாக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதேபோல பாமகவும் 2 மேயர் பதவிகளை கேட்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் மக்களவைத் தேர்தல் கூட்டணியில் இறுதியாகத்தான் தேமுதிக வந்து இணைந்ததால், அந்தத் தேர்தலில் எதிர்பார்த்த இடங்களை அக்கட்சியால் பெற இயலவில்லை. ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, இந்தக் கூட்டணியில் அதிக இடங்களை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது மொத்தம் உள்ள 15 மாநகராட்சி மேயர் பதவியில் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக அதிமுகவிற்கு 7-9 மேயர் பதவி இடங்களே கிடைக்கும் என்று சூழல் உருவாகியுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடேயே சற்று அதிருப்தியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து நின்றாலே பெரிய வெற்றியை பெற முடியும் என்று நினைக்கும் அதிமுக தொண்டர்களுக்கு, இது ஏமாற்றமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகள்: 

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோயில், ஓசூர், ஆவடி உள்ளிடவை ஆகும். இவற்றில் நாகர்கோயில், ஓசூர் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com