“அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரும் மனுவை அபராதத்துடன் நிராகரியுங்கள்” - இபிஎஸ் மனு

“அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரும் மனுவை அபராதத்துடன் நிராகரியுங்கள்” - இபிஎஸ் மனு

“அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரும் மனுவை அபராதத்துடன் நிராகரியுங்கள்” - இபிஎஸ் மனு
Published on

அதிமுக-வின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், முகம் காட்ட விரும்பாத சிலரின் தூண்டுதலால் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக கட்சி விதிப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை  உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்ற நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடைபெறவில்லை என்பதால், உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சசிகலா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தாமோதரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சூரியமூர்த்தியின் மனுவை நிராகரிக்க கோரி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நிராகரிப்பு மனுதாக்கல் செய்யபட்டது.

அதில், சூரியமூர்த்தி இன்றைய தேதியில் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால் இந்த வழக்கை தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், வேறு சிலரின் தனிபட்ட நலனுக்காக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

முகத்தை காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குவதாகவும், ஏற்கனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டு, பின்னர் அதனை எதிர்த்து  டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக-வின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதோடுஇரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தங்கள் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது எனவும் பழனிசாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு , செப்டம்பர் மாதம் சசிகலாவை நீக்கி  பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், கொரோனா சூழல் காரணமாக உட்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வரும் டிசம்பர் மாதம் வரை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர் நிறைய தகவல்களை மறைத்துள்ளதாவும், அவர் உறுப்பினர்தான் என்பதை நிரூபிப்பதற்கான  ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை எனவும், ஒரே கோரிக்கைக்கு பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com