’இபிஎஸ், ஜெ., அண்ணா’ வம்புக்கு இழுத்த அண்ணாமலையின் பேச்சுகளும் அதிமுகவின் எதிர்வினைகளும்! ஓர் பார்வை

அதிமுக - பாஜக இடையே கூட்டணி பிரிந்த நிலையில், அதற்குக் காரணம் அண்ணாமலையில் பேச்சுகள்தான் எனச் சொல்லப்படுகிறது. கடந்தகாலங்களில் அதிமுகவுக்கு எதிராக அவர் பேசியது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஜெயலலிதா, இபிஎஸ், அண்ணாமலை
ஜெயலலிதா, இபிஎஸ், அண்ணாமலைபுதிய தலைமுறை

அதிமுக - பாஜகவுக்கு இடையே 2021 முதல் தொடரும் மோதல் 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட (2021, ஜூலை) பிறகு, ஆளும் திமுகவுக்கு எதிராக அதிக விமர்சனங்களை வைத்துவந்தார். அதேநேரத்தில் அவ்வப்போது அதிமுக - பாஜக கூட்டணிக்கிடையே கருத்து மோதல்களும் வெடித்து வந்தன. ’2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம்’ என அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் பேசி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ’ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கும் பாஜகவே காரணம்’ என அதிமுகவின் மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால், ’இதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலமே 43 ஆயிரம் வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது’ என பாஜகவின் தலைவர்கள் கூறினர். அப்போதே கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்தது. எனினும், டெல்லி தலைமை தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தியது.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி கோப்பு படம்

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல்!

இந்த சமயத்தில் கடந்த மார்ச் மாதத்தில், பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வந்தது. அப்போது, அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதாகச் சில தகவல்கள் பரவின. அதாவது இந்தக் கூட்டத்தில், ’திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்தத் தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று பாஜக மேலிடம் முடிவெடுத்தால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்’ என அண்ணாமலை பேசியதாகத் தகவல் பரவியது. ஆனால், இதுகுறித்து கட்சித் தரப்பில் உறுதியான எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

திமுகவின் ஊழல் பட்டியலின்போது அதிமுகவையும் வம்புக்கு இழுத்த அண்ணாமலை!

இதைத் தொடர்ந்து அண்ணாமலையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியது. ஆம், கடந்த ஏப்ரல் மாதம் திமுகவினரின் முதல் ஊழல் பட்டியலை வெளியிட்டுப் பேசிய அவர், ’இதன் இரண்டாம் பாகத்தில் திமுகவினரின் கருப்புப் பணம், மற்றும் ஊழல் விவரங்கள் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன்’ என்று கூறினார். இது, அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாது, 1967 முதல் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் ஆட்சி செய்து வருகின்றன. தமிழ்நாட்டை அதிகமுறை ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். அப்படியிருக்கையில், அக்கட்சியின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட இருக்கிறாரா என்ற பேச்சும் அப்போது எழுந்தது. இதுதொடர்பாக அதிமுகவினர் அவர்மீது விமர்சனங்களை வைத்தனர்.

EPS, Annamalai
EPS, AnnamalaiPT Web

ஜெயலலிதா பற்றிப் பேசியதால் மீண்டும் வெடித்த மோதல்!

தொடர்ந்து இருதரப்பும் அமைதியாக இருந்தவேளையில், கடந்த ஜூன் மாதம் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்ணாமலை பேட்டியளித்திருந்தார். அதில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" எனக் கூறி மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதுடன் கடும் கண்டனங்களும் குவிந்தன. ஆனாலும், ஜெயலலிதா பற்றிய தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

கூட்டணி குறித்து தெளிவாகப் பேசிய அண்ணாமலை!

இதுகுறித்து அவர், ‘ஜெயலலிதா பற்றிய என்னுடைய கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டனர். என்னுடைய பேட்டியில் நீதிமன்ற நடவடிக்கையைத்தான் கூறினேன். அதிமுகவின் தரம்தாழ்ந்த கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நாளிதழுக்கு நான் கொடுத்த பேட்டியில் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன். அதில் தவறேதும் இல்லை. கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது’ எனப் பதிலளித்திருந்தார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டை விமர்சித்த அண்ணாமலை

இந்த நிலையில்தான், மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதுகுறித்து அதிமுகவினர் பலரும் பிரம்மாண்டமாகப் பேசியிருந்தனர். இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, ‘அ.தி.மு.க.,வினர் நம்மோடு கூட்டணியில் தான் உள்ளனர். மக்களை கவர வேண்டும் என்பதற்காக, மதுரையில் மாநாடு நடத்தினர். பிரமாண்ட மாநாடு என்று கூறிக் கொள்கின்றனர். எனக்கு தெரிந்த வரை, அதில் பிரமாண்டம் இல்லை.

மாநாட்டுக்கு கட்சியினர், 10 சதவீதம் பேர் வந்தனர். மீதம் இருக்கும், 90 சதவீதம் பேர், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். இப்படிப்பட்ட மாநாடுகளால், மக்களிடம் எந்த ஈர்ப்பும் ஏற்படாது. அதுபற்றி, பா.ஜவில் யாரும் கவலைப்பட தேவையில்லை. மேலிடத்தில் கூறி விட்டனர். அதனால், எந்தக் கூட்டணி கட்சியாக இருந்தாலும், மரியாதையோடு நடத்தப்படுவர்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்ணா - முத்துராமலிங்கத்தேவர் விவகாரத்தில் அண்ணாமலையின் பேச்சு

தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

தி இந்து நாளிதழில் வெளியான உண்மைத் தகவல்

இது, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் இடையேயும் பிளவு ஏற்பட்டது. அதேநேரத்தில் அண்ணாமலையின் கருத்து குறித்து ’தி இந்து’ நாளிதழும் அண்ணாமலையின் கருத்து குறித்து விளக்கமளித்திருந்தது. அதில், ’1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திகளை ஆராய்ந்தால், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவின் நான்காவது நாளில் முத்துராமலிங்கத் தேவர் அண்ணாதுரையின் கருத்தில் முரண்பட்டார். ஆனால் அண்ணாதுரை வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை தலைவர் பதவியில் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டன. ஆனாலும், இதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, ’நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் சொன்ன ஒரு டேட்டா தவறு என சொல்லுங்கள். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு:  ஜெயக்குமார் அதிரடி

அதுவரை இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த மோதல் விவகாரம் இந்தப் பிரச்னைக்குப் பிறகு பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை பேச்சு காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை’ என அறிவித்தார்.

அண்ணாமலை -  ஜெயகுமார்
அண்ணாமலை - ஜெயகுமார் File Image

தொடர்ந்து ‘இந்தக் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை’ என தெரிவித்தார். இந்த நிலையில்தான், இன்று (செப்.25) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுகுறித்த அதிரடி அறிவிப்பும் ஊடகங்களில் வெளியாக இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com