மீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்விட்டர் யுத்தம் 

மீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்விட்டர் யுத்தம் 
மீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்விட்டர் யுத்தம் 

#GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வூகான் மாகாணத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்து பேசி இருந்தார். இச்சந்திப்பு இருநாட்டு உறவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. கடந்த 54 ஆண்டுகளில் சீன அதிபருடன், இந்திய பிரதமர் ஒருவர், அரசுமுறை அல்லாத சந்திப்பை நிகழ்த்தியது அதுவே முதல்முறை எனப் பலர் கூறியிருந்தனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சந்திப்புக்குப் பிறகு இன்று இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸி ஜின்பிங். அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் வரை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விமான நிலைய ஐந்தாம் எண் நுழைவாயிலிலுள்ள பூங்கா,  சீன அதிபர் வருகைக்காக மறு ஆக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவது இரு நாட்டு ஒற்றுமையை போற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்திய, சீன கலைகள் குறித்த ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் வண்ண விளக்குகளும், அதிதிறன் கொண்ட விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங் வருகையை வரவேற்கும் வகையில் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்திட்டு வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தரப்பினர் ‘#GoBackModi’ என்ற ஹேஷ்டேக் போட்டு அவருக்கு எதிராக கருத்திட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்த இரு தரப்பினர்களின் செயல் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன் அடையாளமாக அனைத்து நேரங்களிலும் Go Back Modi என சொல்வது சரியல்ல என்றும் மாமல்லபுரம் போன்ற வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் நடக்கும் சந்திப்பு தமிழகத்திற்கு பெருமை என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி மோதல் போக்கை தொடர்வது நாட்டின் நலனுக்கு நல்லது இல்லை என்றும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர். 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார். அப்போது மோடியின் வருகையையொட்டி 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சியினர் கறுப்புக் கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தனர். 

அப்போது இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த ஹேஷ்டேக் அப்போது இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com