செப்டிக் டேங்க்கில்விழுந்து வேளாண்துறை பெண் ஊழியர் பலி- அலுவலகத்தில் கழிப்பறை இல்லாத அவலம்
வேளாண்துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் வீட்டிற்கு வந்த 24 வயதான பெண் அரசு ஊழியர் செப்டிக் டேங்க்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் சரண்யா என்கிற மாற்றுத்திறனாளி பெண்மணி கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்தினால் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் கழிவறைக்கு சென்றுள்ளார். தொடர் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த ஓட்டின்மீது சரண்யா கால்வைக்கும்போது ஓடு உடைந்து செப்டிக் டேங்க் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். கழிவறைக்கு சென்ற பெண் வெகுநேரமாக வராத காரணத்தினால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் சரண்யாவை தேடி வரும்பொழுது செப்டிக் டேங்க்குக்குள் மூழ்கி இருப்பதை பார்த்துள்ளனர். 8 அடி ஆழம் கொண்ட டேங்க்கில் மூழ்கிய சரண்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் வரும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் வேறுவழியின்றி அருகில் மற்றொரு வீட்டிற்கு கழிவறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதன் காரணமாகவே 24 வயதான சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை தொடர்புகொண்டு கேட்கும்போது, உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளை இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.