
கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் சூழலில் போதிய வருமானம் கிடைக்காததால் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள்.
இறை வழிபாட்டில் முக்கிய இடம் பிடிக்கும் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் வசித்துவரும் மண்பாண்ட தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சந்தைகளில் வலம் வரும் பிளாஸ்டிக், மெழுகு, பித்தளை, செம்பு விளக்குகளால் மக்கள் மத்தியில் அகல் விளக்கின் மவுசு குறைந்து கொண்டே வருவதால், என்ன செய்வது என்று தெரியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள். தற்போது பெய்து வரும் கன மழையால் அகல் விளக்குகளை தயாரிக்க முடியவில்லை என கூறும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண் கிடைப்பதில்லை, கலவையை உலர வைக்க முடிவதில்லை, தயாரிக்கப்படும் விளக்குகளை காயவைப்பதில் சிக்கல் போன்ற காரணங்களால் அகல் விளக்கு தயாரிப்பு சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில தினங்களில் கார்த்திகை தீபத் திருவிழா வந்துவிடும் என்பதால் கடும் சிரமத்திற்கு மத்தியில் அகல் விளக்குகளை தயாரித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்கள், களிமண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கலை தீர்க்க வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: காதர்உசேன்