கொரோனா பாதிப்பில் மீண்டும் முதலிடம் பிடித்த தலைநகரம் - சென்னை மாநகராட்சி புது எச்சரிக்கை

கொரோனா பாதிப்பில் மீண்டும் முதலிடம் பிடித்த தலைநகரம் - சென்னை மாநகராட்சி புது எச்சரிக்கை
கொரோனா பாதிப்பில் மீண்டும் முதலிடம் பிடித்த தலைநகரம் - சென்னை மாநகராட்சி புது எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை இரண்டாயிரத்து 812 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 60 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மண்டப உரிமையாளர்களிடம் இருந்து 2 லட்சத்து 29 ஆயிரத்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அரசின் தடையை மீறி நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்து கொண்ட 20 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் அமைப்புகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதனிடையே, நீண்ட நாட்களுக்கு பிறகு மாவட்ட அளவில் சென்னை மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் 2 ஆயிரத்தை நெருங்கியே ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 11 நாட்களில் 15 லட்சத்து 60 ஆயிரத்து 754 பேருக்கு பரிசோதனை செய்ததில், 21 ஆயிரத்து 497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20 ஆயிரம் என்ற எண்ணிக்கை அளவிலேயே நீடித்து வருகிறது.

மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்துவந்த நிலையில் மீண்டும் சென்னையில் அதிக பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நெருக்கடி மிகுந்த சென்னையில் மீண்டும் தொற்று எண்ணிக்கை முதலிடத்திற்கு வந்திருப்பதை எச்சரிக்கையாக கருத வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் 200 என்ற அளவிலேயே இருந்த பாதிப்பு ஒரே நாளில் 243 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் சென்னையில் 2 ஆயிரத்து 156 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஒரே நாளில் 229 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 494 பேர் கோவை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் முந்தைய நாளில் 79ஆக இருந்த பாதிப்பு 98ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் 68ஆக இருந்த பாதிப்பு 78ஆகவும், புதுக்கோட்டையில் 32ஆக இருந்த பாதிப்பு 39ஆகவும் அதிகரித்துள்ளது. தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் விகிதம் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் ஒரே நாளில் 482 பேருக்கும், கர்நாடகாவில் ஆயிரத்து 826 பேருக்கும், ஆந்திராவில் ஆயிரத்து 869 பேருக்கும், கேரளாவில் 23 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com