டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி

டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி
டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.சுந்தரராஜை எதிர்த்து கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.‌‌ அதில், அரசு மணல் குவாரி ஒப்பந்தம் பெற்றுள்ளதை மறைத்து ஆர்.சுந்தரராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சுந்தரராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்தத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது இந்த வழக்கை சுட்டிகாட்டி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரியும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு வாபஸ் பெறப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், ஓட்டபிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படும் பட்சத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதன் அடிப்படையில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் திரும்ப பெற்றார். தற்போது, கிருஷ்ணசாமியும் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com