ஆளுநர் ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர்.. மீண்டும் வெடிக்கும் சர்ச்சை
குடியரசு துணைத் தலைவர் தமிழ்நாடு பயணம் மேற்கொள்ள நிலையில், சர்ச்சைக்குரிய துணைவேந்தர்கள் மகாநாட்டில் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை வரும் ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் உதகை ராஜ்பவனில் ஆளுநர் ரவி நடத்துகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உட்பட தமிழ்நாடு அரசின் 10 சட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி துணைவேந்தர்கள் மகாநாட்டை கூட்டியது தவறு என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஆளுநர் ரவி அழைப்பின் அடிப்படையில், உதகமண்டலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மகாநாட்டில் கலந்து கொள்கிறார் ஜெகதீப் தன்கர். ஆளுநர் ரவி டெல்லியில் சனிக்கிழமை ஜெகதீப் தன்கரை சந்தித்து துணை வேந்தர்கள் மகாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆளுநர் ஆர் என் ரவி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க கூடாது என ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் கடும் சர்ச்சை எழுந்தது.
திமுக ஜெகதீப் தன்கர் விமர்சனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தமிழ்நாடு பயணம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் இந்த மகாநாட்டை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணை வேந்தர்கள் மகாநாட்டை நடத்த ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை என பாஜகவுக்கு எதிர்ப்பாக உள்ள கட்சிகள கருதுகின்றன. துணைவேந்தர்கள் மகாநாட்டுக்கு பிறகு தோடர் பழங்குடியினர் ஆலயத்துக்கு பயணம் செய்ய உள்ளார் ஜெகதீப் தன்கர்.
விமானம் மூலம் கோயம்புத்தூர் வரும் ஜெகதீப் தன்கர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் உதகமண்டலம் பயணம் செய்ய உள்ளார். ஏப்ரல் 26 ஆம் தேதி உதகமண்டலத்திலிருந்து ஜெகதீப் தன்கர் புறப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.