27 ஆண்டுகளுக்கு பிறகு... இப்படி ஒரு கனமழை ஏன்? - பிரதீப் ஜான் விளக்கம்!

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் திடீர் கனமழைக்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

Pradeep john
Pradeep john

அதில் அவர், ''தமிழ்நாட்டிற்கு அருகே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
சென்னையில் திடீர் கனமழைக்கு காரணம் இதுதான்! #ChennaiRains

ஒரு மாதத்துக்கு சராசரி மழை 50 முதல் 60 மில்லி மீட்டர் வரை மட்டுமே பதிவாகக்கூடிய சூழலில், தற்போது சில மணி நேரத்திலேயே 3 மடங்கு மழை நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாரம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்யும். ஆனால் நேற்றிரவு பெய்த அளவுக்கு இருக்காது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மாலை, இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும்.

குஜராத்தில் புயல் கரையை கடந்த காரணத்தால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விட்டது. இதனால் கேரளாவில் இன்னும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவில்லை. தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் வரைக்கும் சென்னைக்கு மழை வாய்ப்பு இருக்கிறது.

வரும் 24ஆம் தேதி முதல் கேரளா, கர்நாடாகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் சென்னையில் மழை படிப்படியாக குறையும்.

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக 1996ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது.

அந்த சமயத்தில் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது கவனிக்கத்தக்கது. 1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “2K-வை சேர்ந்த குழந்தைகளே அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் அவர்களுக்குத்தான் ஒரே ஜூன் மாதத்தில் அதீத வெயிலுக்காகவும் அதீத மழைக்காகவும் அடுத்தடுத்து விடுமுறை கிடைத்துள்ளது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை மாநகராட்சி அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதன்படி புகார் உள்ள சென்னைவாசிகள், 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com