10 ஆண்டுக்குப் பிறகு வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

10 ஆண்டுக்குப் பிறகு வைகை அணையிலிருந்து நீர் திறப்பு
10 ஆண்டுக்குப் பிறகு வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

10 ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஜூன் மாதத்தில் வைகை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாய தேவையையும் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு நீர் வரத்து இல்லாதலும், பருவ மழை பொய்த்ததினாலும் ஜூலை மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு முல்லை பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை மாவட்டங்களிலுள்ள இரு போக சாகுபடி நிலங்களின் முதல் போக பாசனத் தேவைக்காக 10 ஆண்டுகளுக்கு பின்னர்   தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வைகை அணையில் இருந்து நீரை திறந்து விட்டனர். இன்று திறந்து விடப்பட்ட நீரின் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்திலுள்ள 26792 ஏக்கர் மற்றும் வாடிபட்டி வட்டத்திலுள்ள 16452 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1797  ஏக்கர் நிலங்களும் என மொத்திம் 45041  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 120 நாட்களுக்கு திறந்து விடப்படும் தண்ணீரானது இன்று முதல் 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம், அதன் பிறகு 75 நாட்களுக்கு முறை பாசனம் என மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com