பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முறையாக வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திட்டத்தின் நோக்கம்
வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல், விலங்கு தாக்குதலால் பயிர்கள் அழிந்தால் இழப்பீடு வழங்கும் நோக்கில் ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற காப்பீட்டு திட்டம் மத்திய அரசால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. வருவாயை அதிகரிக்க, அதிநவீன தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் இந்தக் காப்பீட்டில் இணைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயத்திற்காக வங்கிகளில் கடன் பெறும் பொழுதே பயிர்க் காப்பீட்டு திட்டம் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு விடும். ஒருவேளை வங்கிகளில் கடன் பெறாவிட்டால், பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வங்கிகளிலும், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமும் கட்டணத்தை செலுத்தி பதிவு செய்யலாம். கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து விதைப்பு சான்றிதழை பெற்று பெற்றுக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் நலம் உள்ளிட்டவற்றை சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.
பயிர்க்காப்பீட்டு விகிதம்
காரிப் பருவப் பயிர்கள் - 2 சதவீதம்
ரபி பருவப் பயிர்கள் - 1.5 சதவீதம்
பணப் பயிர்கள், தோட்டடக் கலைப் பயிர்கள் - 5 சதவீதம்
மீதமுள்ள மொத்த கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து செலுத்திவிடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது, இழப்பீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு அதற்கேற்க விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். முழு இழப்பீட்டு தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
விவசாயிகளிடையே ஆர்வம்
நாடுமுழுவதும் விவசாயிகள் மத்தியில் ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ பயிர்க் காப்பீட்டு திட்டத்தை கொண்டு செல்ல முழுவீச்சில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. அதற்கான விவசாயிகள் மத்தியில் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக குறைவான அளவிலே விவசாயிகள் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்திற்கு பிறகு விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் பருவத்திற்கான காப்பீட்டு கட்டணம் கட்டுவதற்கு நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். கஜா புயால் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருந்ததால் உடனடியாக விவசாயிகளால் கட்டணத்தை கட்ட முடியவில்லை.
தமிழக விவசாயிகள் கோரிக்கை
தங்களுக்கு பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறும் தஞ்சை விவசாயிகள், ஏற்கனவே செலுத்திய காப்பீட்டு தொகைகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முழுத் தொகையில், மீதமுள்ளவர்களுக்கு மிகவும் குறைவான தொகையும் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நவம்பர் 30 ஆம் தேதிக்குள் நிறைய இடங்களில் சர்வர்கள் வேலை செய்யவில்லை. அதனால், எங்களால் பணம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அதனால், காப்பீட்டுத் தொகைக்காக கட்டணத்தை செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.