பொது முடக்கத்தில் விமானப் பயணம்: எப்படி இருந்தது ?

பொது முடக்கத்தில் விமானப் பயணம்: எப்படி இருந்தது ?
பொது முடக்கத்தில் விமானப் பயணம்: எப்படி இருந்தது ?

உள்நாட்டு விமான சேவைகள் இன்று தொடங்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கு என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது, அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நேரடியாக களத்திலிருந்து பெற்றத் தகவல்களின் அடிப்படையில் விளக்குகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன.இதனிடையே ஊரடங்கை நீட்டித்த மத்திய உள்துறை அமைச்சகம், அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வுகளை தளர்த்தலாம் என அறிவித்தது.

அதன் படி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இதனிடையே பல்வேறு விதிமுறைகளுடன் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகள் மே 25 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். அதன் படி இன்று உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை 65 பயணிகளுடன் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானமும், அதனை தொடர்ந்து 70 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தடைந்தது.

விமானங்களில் பயணித்த பயணிகளிடம் இருந்தும், விமானத்துறை அதிகாரிகளிடம் இருந்தும் பயண விதிமுறைகள் மற்றும் பயணம் தொடர்பான பிற விவரங்களை புதியதலைமுறை பெற்றது. அவை உங்கள் பார்வைக்கு.

1. விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் டெல்லி விமான நிலையத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துள்ளனர்.

2. டெல்லியில் விமான நிலையத்தில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

3. 180 நபர்கள் பயணிக்கக்கூடிய விமானத்தில் மொத்தம் 70 நபர்கள் மட்டுமே பயணித்துள்ளனர். இதனால் பயணிகளிடையே சமூக இடைவெளி இயல்பாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

4. விமானத்தில் 70 நபர்கள் வந்த போதும், புக்கிங் தளத்தில் 180 டிக்கெட்டுகளையும் புக் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேளை 180 நபர்கள் டிக்கெட்டை புக்கிங் செய்திருந்தால் அங்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமமான காரியமாக இருந்திருக்கும்.

5. முன்னதாக விமானத்தில் பயணிக்க பயணிகள் என்னென்ன ஆவணங்களை சமர்பித்தார்களோ தற்போதும் அதே ஆவணங்களை சமர்பித்துள்ளனர்.

6. விமானத்தில் உணவுபொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7. கோவை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு பிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக 5 மருத்துவ குழுவினர் விமான நிலைய வளாகத்துக்குள் முகாமிட்டு இருந்தனர்.

8. பயணிகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டவுடன் அவர்கள் அரசு ஒதுக்கியுள்ள தனியார் மையங்களில் 24 மணிநேரம் தங்க வைக்கப்படுகின்றனர். இதில் அரசு மையங்களில் தங்க விரும்பாதோர் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி தனியார் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

9. பயணிகளுக்கான பரி சோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வந்து விடுகிறது. பயணியின் முடிவு பாசிடிவாக இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைக்கும், நெகடிவாக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்கும் அனுப்பப்படுகின்றனர். இதில் வீட்டிற்கு அனுப்பப்படும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள். இதில் கோவை மாவட்டத்தற்கு வரும் கோவை மாவட்டம் அல்லாத பிற மாவட்ட விமான பயணிகள் குறித்த விவரங்கள் கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் மூலமாக பயணிகளின் சொந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. தனிமைப்படுத்துதலின் அடையாளமாக அவர்களின் கையில் சீல் வைக்கப்படுகிறது.

10. இதில் பிற நோய்களுக்காக சிகிச்சை பெற வரும் பயணிகள், சிகிசைக்காக வரும் எங்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் எனபது சிரமாக உள்ளது என்றும் இதனால் எங்களுக்கு கால விரயம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டோம், அவர்கள் “ விமானப் போக்குவரத்து என்பது பிறப் போக்குவரத்து சேவைகள் போல் அல்ல. சமூக இடைவெளிக்காக நாங்கள் இருக்கைகளை ஒதுக்கினால் எங்களுக்கு பெருத்த நஷ்டம்தான் ஏற்படும்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com