
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடிங்கி காவலர்கள் சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சார் ஆட்சியர் விசாரணை கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்விவகாரத்தில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். மற்றொருபக்கம் மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில், அமுதா ஐஏஎஸ் தலைமையில் பல் உடைப்பு விவகாரம் குறித்து உயர்மட்டக் குழு விசாரணை நடத்தப்பட்டு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இப்படியான நிலையில், “இந்த விசாரணை குழுவில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை” என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வழக்கறிஞரும், நேதாஜி சுபாஷ் சேனை தலைவருமான மகாராஜன் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் சார் ஆட்சியர் விசாரணை முடிந்தவுடன் நடவடிக்கை இருக்கும் என சொன்னார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது அமுதா ஐஏஎஸ் தலைமையில் உயர்மட்டக் குழு விசாரணை நடைபெறும் என சொல்கிறார்கள்.
உயர்மட்டக் குழு விசாரிக்கும் அளவிற்கு இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் மகாராஜன்
வழக்கு முதல்நிலையில் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விசாரணையை கூட மெதுவாக நடத்தி இருக்கலாம். இதுவரை 19 சாட்சியங்கள் வந்து விட்டார்கள். இன்னும் 40 முதல் 50 பேர் வரை சாட்சி சொல்ல வருவார்கள் என்ற நிலையில், ஏற்கெனவே சார் ஆட்சியரிடம் இவர்கள் சாட்சியம் அளித்து விட்டார்கள். மனித உரிமை ஆணையத்திலும் தங்கள் பாதிப்பை பதிவு செய்து விட்டார்கள். காவல் நிலையத்திலும் பதிவு தபால் மூலம் தங்கள் புகாரை பதிவு செய்து விட்டார்கள்.
இதன் பிறகும் உயர்மட்டக் குழு விசாரணை என்று சொல்வது, போகாத ஊருக்கு வழி சொல்வது போல உள்ளது. இந்த காலதாமதத்தை பயன்படுத்தி சாட்சிகளை சமாதானப்படுத்த காவல்துறைக்கு வாய்ப்பு அளிப்பது போல் தெரிகிறது. சிலருக்கு மிரட்டல்களும் வருவது போல் தெரிகிறது. காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் என்ன ஆனது என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. அதனால் நாங்கள் அமுதா ஐஏஎஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் விசாரணையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை முறையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நாங்கள் கேட்டது உதவி காவல் கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்பது. ஆனால், அவர்கள் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்கள். அதை எந்த நேரத்திலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதே ஊரில் கூட திரும்ப பதவியில் அமர்த்தக்கூடும். ஆகவே, நாங்கள் கேட்பது வழக்குப் பதிவு ஒன்றுதான்.
மட்டுமன்றி பல்வீர்சிங் உடன் சேர்ந்து அடித்தவர்கள், இன்னும் அங்கு வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாத அதிகாரி எஸ்பி சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதுபோல சில உளவுத்துறை காவலர்கள் சரியாக தகவல் சொல்லாததால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், ஏஎஸ்பி-யுடன் சேர்ந்து அடித்தவர்கள் இன்னும் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களையும் சஸ்பெண்ட் செய்திருந்தால் அரசு மீது ஓரளவு நம்பிக்கை வந்திருக்கும். ஆனால், இப்போது அரசு அவர்களுக்கு ஆதரவு தருகிறதோ என்ற அச்சம் உள்ளது.
எந்த ஒரு காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் வழங்கவில்லை. பாப்பாகுடி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய நான்கு காவல் நிலையங்களிலும் இந்த குற்றச்சம்பவம் நடந்துள்ளது.
சுபாஷை வீட்டிலிருந்து காவல் துறையினர் அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சிகளை காவல்துறைக்கு கொடுத்துள்ளோம். இதற்கெல்லாம் காவல்துறை எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை” என்றார்.