ஆவின் தவிர மற்ற அனைத்து பாக்கெட் பாலும் ரசாயனம் கலந்தவை என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், ஒரிஜினல் பால் என்றால் ஃபிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்து 5 மணி நேரத்தில் கெட்டால் தான் அது ஒரிஜினல் பால். 4 நாட்களுக்கு அந்த பால் கெட்டுப்போகாமல் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் தான். இறந்து போனவர்களின் உடல் கெடாமல் இருக்க கெமிக்கல் உடலில் ஏற்றப்படுகிறது. இதனைப் போல் பாலில் உறுதியாக ரசாயனம் கலக்கிறார்கள். சட்ட ரீதியாக இதனை நான் நிரூபிக்க கால தாமதம் ஆகலாம். ஆனால் பால் முகவர்களின் மனசாட்சிக்கு தெரியும். தனியார் கம்பெனிகள் அதிக கமிஷன் கொடுக்கிறார்கள் என்பதால் அந்த கம்பெனிக்கு ஆதரவாக முகவர்கள் பேசுகிறார்கள்.
குழந்தைகளுக்கு கேன்சரே இதன் மூலமாகத் தான் வருகிறது. கேரளாவில் இருக்கிற பால்வள எம்.டி வரை நான் கேட்டுவிட்டேன். அங்கே இதேமாதிரியான பால்களை தடை செய்கிறார்கள். இங்கு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
இந்தத் துறைக்கான அமைச்சரே நீங்கள் தான். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டபோது, ஆதாரங்களை திரட்டி வருகிறேன். ரிக்கார்டு மூலம் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார். ஆவின்பால் தான் தாய்ப்பாலுக்கு நிகரான பால். மக்கள் அதன் பக்கம் அதிகளவில் வருகின்றனர். மக்களிடையே நான் அச்சத்தை ஊட்டவில்லை. எச்சரிக்கை விடுக்கிறேன். ஜெயலலிதா அரசு இதுதொடர்பாக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.