ஹெலிகாப்டர் விபத்து: சுற்றுலாப் பயணிகளிடமும் விசாரிக்க முடிவு
விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 26 சாட்சிகளிடம் நீலகிரி ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் விசாரணை நடத்தியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன் அதனை படம்பிடித்த சுற்றுலாப் பயணிகளிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விமானப்படையின் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேரின் உயிரைப் பறித்த விபத்து பற்றி வெலிங்டன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்து பற்றி விசாரிக்க, நீலகிரி ஏடிஎஸ்பி முத்துமாணிக்கத்தை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர் இதுவரை 26 சாட்சிகளை விசாரித்துள்ளார். இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தும், விசாரணை அதிகாரி முத்துமாணிக்கமும் காட்டேரி வனப்பகுதிக்கு நேரில் சென்றனர். அங்கு ட்ரோன்களைப் பறக்கவிட்டு அவற்றின் மூலம் காட்டுப்பகுதியில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கிறதா என தேடி வருகின்றனர்.
காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நேரிடுவதற்கான புற சாத்தியக்கூறுகள் குறித்து 'MAPING' செய்து ஆராய்ந்து வருகின்றனர். விசாரணையில் பங்கேற்க நீலகிரி, கோவை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்களும் காட்டேரிக்கு வந்திருக்கின்றனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சுற்றளவை கணக்கிட்டு, விபத்து நேரிடும் வகையில் அந்தப் பகுதியில் என்னென்ன உள்ளன என்று ஆய்வு செய்வதே 'MAPPING' ஆகும்.