குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய அதிமுக..!
மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சன் குடும்பத்தினருக்கு, அதிமுக கட்சி சார்பில் நிவாரண நிதி ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை அமைச்சர்கள் அவரது குடும்பத்தினரிடம் இன்று வழங்கினார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாமேரி தம்பதியினரின் இரண்டு வயது இளைய மகன் சுஜித் பலகட்ட மீட்புப்பணிகளின் முடிவில் 29-ஆம் தேதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
நிகழ்விடத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குழந்தையை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, அரசு தரப்பில் ரூ.10 லட்சமும், அதிமுக கட்சி சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து முதல்வர் அறிவித்திருந்த அதிமுக கட்சி சார்பிலான நிவாரண நிதி ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் சுஜித் பெற்றோர்களிடம் இன்று வழங்கினார்கள்.