மேடையிலே வாக்குவாதம் செய்த அமைச்சர், திமுக எம்.எல்.ஏ - தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு
அனைக்கட்டில் தமிழக முதல்வரின் குறைதீர்வு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் குறைகளை சுட்டிகாட்டி பேசிய போது அமைச்சருக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அனைக்கட்டில் தமிழக முதல்வரின் குறைதீர்வு மனுக்கள் பெறும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் வீரமணி, திமுக அனைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ நந்தக்குமார், தனது தொகுதியில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது பத்திரபதிவுத்துறை அமைச்சர் வீரமணி திடீரென குறுக்கிட்டு நீங்கள் விளம்பரத்திற்கு பேசுவதாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், திமுக எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் அமைச்சர் வீரமணிக்கும் இடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுகவை சேர்ந்த முருகேசன் என்பவர் மைக்கை கீழே தள்ளினார். இதனால் அதிமுக தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் மேடையில் இருந்தவர்களை அப்புறபடுத்தி இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.