`அந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்ககூடாது’-அதிமுக உறுப்பினர் வைரமுத்து மனு

`அந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்ககூடாது’-அதிமுக உறுப்பினர் வைரமுத்து மனு
`அந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்ககூடாது’-அதிமுக உறுப்பினர் வைரமுத்து மனு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்தது தொடர்பான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, `உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம்' என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாளை முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க உள்ளார். இந்த நிலையில் அந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென அதிமுக உறுப்பினர் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

அதில், `நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும் என்றுள்ளார். ஆனால் அவர்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரர்களை அவர் குற்றம்சாட்டியும் உள்ளார்.

மேலும் மற்றொரு மனுதாரரான `ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகின்றனர். நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிப்பதாவும் தெரிவித்திருப்பது வழக்கிற்கு சம்மந்தமில்லாத கருத்துகள்’ என்றும் அந்த நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com