
அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி ராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் (எஸ்.என்.செட்டி தெரு சந்திப்பு) இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று ராயபுரத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மக்கள் இருக்கின்ற இடத்திற்கு ஓடோடி சென்று உதவுவது அ.தி.மு.க தான். ஆனால் தி.மு.க.வோ மக்கள் நலனில் சிந்தனை இல்லாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக நிறைய பேசியது. பொய் ஒன்றை மட்டுமே மூலமாக வைத்து திமுக செயல்படுகிறது.
இன்று கூட சட்டமன்றத்தில் முதல்வர் பேசிய உரையைக் கேட்டேன். ஆட்சி மற்றும் ஊடகங்கள் இருக்கும் மமதையில் எதை வேண்டுமானாலும் சொல்கிறது திமுக அரசு. தமிழகத்தை மக்கள் விரோத ஆட்சி ஆண்டுகொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து அவரிடம் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அதன்படி தாத்தா, அப்பா இவ்வளவு காலமாக கோடி கோடியாக சம்பாதித்தார்கள். ஆனால், உதயநிதியோ 2 வருடத்திலேயே ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார்... இதை நாங்கள் சொல்லவில்லை. அவருடன் இருக்கும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
உதயநிதி சொத்து மதிப்பு குறித்து பழனிவேல் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த பணத்தின் மூலம் சென்னையின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சியை இப்போதே கொண்டு வர முடியும். ஆகவே உதயநிதி, சபரீசன், பழனிவேல் தியாகராஜன் என மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்வதோடு அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இதுதான் மத்தியில் உள்ள ஒரு பொறுப்பான அரசின் நடவடிக்கை” என்றார்
தொடர்ந்து அதிமுக விவகாரம் பற்றி பேசுகையில், “பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓ.பி.எஸ்-க்கு ஆரம்பத்தில் வாழ்வளித்தது இரட்டை இலை சின்னம் தான். அதை எதிர்த்து கர்நாடகாவில் வேட்பாளர்களை அவர்கள் அறிவித்திருக்கக் கூடாது. ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தவிர்த்து யார் வேண்டுமானாலும் மீண்டும் அதிமுகவில் இணையலாம்” என்றார்.