சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடி கோடியாக டாஸ்மாக் துறையில் பல்வேறு விதங்களில் ஒரு குடும்பத்திற்காக கொள்ளை அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாயிரம் டாஸ்மாக் அனுமதி இல்லாமல் செயல்பட்டது மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார் செந்தில் பாலாஜி. அதேபோல தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சரக்குகள் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்தால் கிடைக்கும் வரி அரசுக்கு கிடைக்காத வகையில் நேரடியாக அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களில் விற்பனை செய்துள்ளார். பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் என தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களை அவர் செய்ததால் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக இவ்வளவு குதிப்பது ஏன்? அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில் இப்படி ஏன் முதல்வர் குத்திக்கவில்லை? தவறு செய்துள்ளனர் என்பது இதில் இருந்தே தெரிகிறது. தவறு செய்யவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளட்டும்.
மனித உரிமைகள் இந்த கைதில் மீறப்பட்டுள்ளது என அமைச்சர் ரகுபதி கூறுகிறார். என்னை கைது செய்தபோது இதை விட மோசமாக நடத்தினார்கள். அப்போது ஏன் பேசவில்லை? செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவரின் உடல் நிலையை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழலுக்குத்தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,
”அமைச்சராக இருந்த நேரத்தில் தனிநபராகவே வேலை வாங்கி தருவதாக கூறி அவர் மோசடி செய்தார். அதற்கும் அரசுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்” என பதில் அளித்தார்.
மத்திய அரசு சார்பில் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அமைச்சர் மீதான இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறிய கருத்துக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ”அமலாக்கத்துறை சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய தேவை இல்லை. ஆதாரங்கள் மற்றும் விசாரணை அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் மீது தவறில்லை என நினைத்தால் சட்ட ரீதியாக இதனை நிரூபணம் செய்யலாம்.” என தெரிவித்தார்.