“தண்ணீர் பஞ்சத்துக்கு அதிமுக அரசே காரணம்” - துரைமுருகன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்திற்கு முழு காரணம் அதிமுக அரசுதான் என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளத்த அவர். "பாராளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் குறிப்பாக அமைச்சர்களும் அவரைச் சார்ந்தவர்களும் நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள். எனவே நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. ஏராளமான திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது.
உயிர் போகிற குடி தண்ணீர் பிரச்சினையில் கூட கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர். தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சத்துக்கு முழு காரணமும், முதல் காரணமும் அதிமுக அரசு தான். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு சொட்டு தண்ணீருக்கு கூட முயற்சி எடுக்கவில்லை. இவர்கள் கல்குவாரிகளில் உள்ள கெட்டுப்போன தண்ணீரை கொடுக்கிறேன் என்பது விஷத்தை கொடுப்பது போன்றது. குடிநீர் வாரியம் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான்” என்று கூறினார்.