’கைதி எண் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு அமைச்சராக தொடர முடியும்? அதுதான் எங்கள் கேள்வி” - ஜெயக்குமார்

“அமைச்சர் பதவி என்பது ஒரு கேடயம்.. அது செந்தில் பாலாஜியை சுற்றி இருந்தால் அமலாக்கத்துறை சுழற்றும் வாளை அது தடுக்கும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
jayakumar
jayakumarpt desk

சென்னை சூப்பர் ஸ்டைக்கர்ஸ் என்ற கால்பந்து கிளப்பின் லோகோ வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் விளையாட்டு தலைநகரமாக சென்னை இருக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன் ஆட்சி காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்தினார்கள். அப்போது வளர்ந்தது தான் சென்னை.

பல விளையாட்டு மைதானங்களை உருவாக்கி அதன் மூலம் விளையாட்டில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். நேரு மைதானம் 6 மாதத்தில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது” என்றார். தொடர்ந்து செந்தில் பாலாஜி விவகாரம் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

cm stalin
cm stalinpt desk

அதற்கு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ‘செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி; நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியிருந்தார் அவர்.

அமலாக்கத்துறை கைது செய்து கைதி எண் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு அமைச்சராக தொடர முடியும்? அது தான் எங்கள் கேள்வி! அதனால் தான் நாங்கள் ஆளுநரிடம் மனு அளித்தோம். எங்கள் ஆட்சிக் காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இது போன்று நீக்குங்கள் என ஆளுநரிடம் உதாரணங்களை நாங்கள் கூறினோம்.

இலாகாவை கவனிக்க தான் ஒரு அமைச்சர். இலாகா இல்லாத அமைச்சருக்கு எதற்கு மக்களின் வரிப்பணம் என்பது தான் எங்கள் கேள்வி. மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அமைச்சராக இருக்கும் நிலையில் விசாரணைக்கு எவ்வாறு அவர் ஒத்துழைப்பார்? ஒத்துழைக்க மாட்டார். அமைச்சராக அவர் இருப்பது, விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும். பல உண்மைகள் வெளிவராமல் சென்று விடும்.

RN Ravi - Senthil Balaji - MK Stalin
RN Ravi - Senthil Balaji - MK StalinFile image

சமயோகித புத்தியில் ஆளுநர் செந்தில் பாஜியை நீக்கியுள்ளார். அதன் பின் அட்டர்னி ஜெனரல் இடம் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வியை ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும். அமைச்சர் என்பது ஒரு கேடயம். அது செந்தில் பாலாஜியை சுற்றி இருந்தால் ஈடி சுழற்றும் வாளை அந்த கேடயம் தடுக்கும். கைதி எண் கொடுத்த பிறகு எவ்வாறு ஒருவர் அமைச்சராக நீடிக்க முடியும். அமைச்சராக நீடிப்பதற்கு செந்தில் பாலாஜிக்கு எந்தவித தகுதியும் இல்லை.

அமைச்சர் என்கிற கேடயத்தின் மூலம் அமலாக்கத் துறையின் வாளை தடுப்பது தான் மாநில அரசின் உச்ச பச்ச எண்ணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது” என்றார்.

மேலும், மாமன்னன் படம் குறித்து பேசும்போது, “படமெல்லாம் நான் பார்ப்பது கிடையாது. மாமன்னன் சுத்த ஃப்ளாப் படம் தான். திமுகவினர் தான் அந்த படத்தை சென்று பார்க்கிறார்கள். சமூக நீதிக்கு கொஞ்சமாவது திமுகவிற்கு தகுதி இருக்கிறதா? அதிமுக தான் பட்டியலின மக்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்த கட்சி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் சமூக நீதியை நிலை நாட்டியவர்.

Minister Udayanithi
Minister Udayanithipt desk

தனபால் சபாநாயகராக இருந்தபோது திமுகவினர் அவரை, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி சமூக நீதியை குழி தோண்டி புதைத்தனர். சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் கிடையாது. அருந்ததிய சமூதாயத்தினரை திமுகவினர் தற்பொழுது சபாநாயகராக அமர வைப்பார்களா?” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com