2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும்... கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன் - சசிகலா
செய்தியாளர்: மா.மகேஷ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று வி.கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து உண்ணாமலை அம்மன் சன்னதியின் உள்ள நவகிரக சன்னதியில் நவதானிய விளக்கேற்றி வழிபட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தற்போது தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்துப் கட்சிக் கூட்டத்தை நடத்தி மக்கள் மத்தியில் திமுக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்பொழுது தி.மு.க.வினர் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்குகின்றனர். இதில் ஏதோ தவறு உள்ளது. தமிழக முதலவர் ஸ்டாலின் மத்திய அரசை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க-வை ஒருங்கிணைப்போம், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன் என்று சசிகலா தெரிவித்தார்.