வேலூரில் திறக்கவிருப்பது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? விளம்பர கட்டடமா? - EPS கேள்வி
வேலூரில் முதல்வர் திறக்கவிருப்பது மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனையா? மல்டி ஸ்பெஷாலிட்டி விளம்பர கட்டடமா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூரில் திறக்கப்படும் பல்நோக்கு
மருத்துவமனையில் இதயவியல் துறை, நரம்பியல் துறை உள்ளிட்ட துறைகள், கட்டடங்கள் பெயரளவுக்குதான்
உள்ளன, ஆனால் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் பதவிகள் நிரப்பப்படவில்லை என்று விமர்சித்துள்ளார். நோயாளிகளின் உயிருடன் முதல்வர் துடிக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த விடியா திமுக @mkstalin
மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை (Multi Speciality Hospital) என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (25.6.2025) பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திறக்கப்பட உள்ள வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூர் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை.
'யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை' என்ற ஒரே குறிக்கோளோடு இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதால்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவத் துறை இன்றைக்கு பின்தங்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் திரு. சுப்பிரமணியன், வாய்ப் பந்தல் போட்டு இந்த உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது. இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது. புரட்சித் தலைவரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. 'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்' 'ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு!' 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும்!" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், நூறு விழுக்காடு பணிகள் நிறைவடைந்த பிறகே வேலூரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதாகவும் மருத்துவமனையின் கட்டுமான
பணியை ஆய்வு செய்த பின், எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.