தேர்தல் நன்கொடை வசூல்: அதிமுக ரூ.52 கோடி; திமுகவுக்கு ரூ.48 கோடி வசூல்

தேர்தல் நன்கொடை வசூல்: அதிமுக ரூ.52 கோடி; திமுகவுக்கு ரூ.48 கோடி வசூல்
தேர்தல் நன்கொடை வசூல்: அதிமுக ரூ.52 கோடி; திமுகவுக்கு ரூ.48 கோடி வசூல்

2019-2020 நிதி ஆண்டில் திமுகவிற்கு ரூ.48 கோடியே 30 லட்சம் தேர்தல் நன்கொடை கிடைத்துள்ளது. இதில், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.45 கோடியே 50 லட்சம் வசூல் கிடைத்திருக்கிறது.

இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி நடத்தவும், தேர்தலை சந்திக்கவும் நன்கொடை வசூல் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை நிறுவனங்கள், அமைப்புகள், பொது மக்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள பணத்தை தேர்தல் நிதி பத்திரம் மூலமாக பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நன்கொடை வசூல் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் அனைத்து கட்சிகளும் 2019- 2020 நிதியாண்டில் வசூலித்த தொகை தொடர்பாக தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அதிமுக ரூ.52 கோடி நிதி வசூல் செய்துள்ளது. அதில் ரூ.46 கோடி டாடா நிறுவனத்தின் புரோகிரசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலமாக கிடைத்துள்ளது. ரூ.5 கோடியே 38 லட்சம் ஐ.டி.சி. நிறுவனம் வழங்கி இருக்கிறது.

இதேபோல எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 2019- 2020 நிதியாண்டில் ரூ.48 கோடியே 30 லட்சம் கிடைத்துள்ளது. அதில் ரூ.45 கோடியே 50 லட்சம் தேர்தல் பத்திரம் மூலமாக பெறப்பட்டுள்ளது. அதாவது 93 சதவீத நிதி தேர்தல் பத்திரம் மூலமாக அந்த கட்சிக்கு கிடைத்து இருக்கிறது. நாட்டிலேயே நிதி வசூலில் 93 சதவீதத்தை தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றது தி.மு.க. மட்டுமே.

தேர்தல் நிதிப் பத்திரம் என்றால் என்ன?

அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1,00,000, ரூ.10 லட்சம், ரூ. 1 கோடி மதிப்பிலான தேர்தல் நிதி பத்திரங்கள், பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்பனை செய்யப்படும். இந்த பத்திரங்களை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்தப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com