“வாக்கு எண்ணிக்கையை திமுக தாமதப்படுத்துகிறது” - ஆணையத்தில் அதிமுக புகார்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை திமுக திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பல வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குவாதங்களும், கை கலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களுக்கு, முடிவுகள் அறிவிக்கவில்லை என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிமன்றம், மனுவாக தாக்கல் செய்துவிட்டு நாளை முறையிடும்படி தெரிவித்தது.
இந்நிலையில் திமுகவை எதிர்த்து அதிமுக சார்பில் பொன்னையன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை திட்டமிட்டு திமுக தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.