நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் பெயர்கள் இன்று அறிவிப்பு
தமிழகத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. 66 வயதான புகழேந்தி தனது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் விவசாயம் செய்து வருகிறார். 1973-ஆம் ஆண்டு திமுகவின் கிளைச் செயலாளர் பதவி வகித்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். மேலும், அத்தியூர் திருவாதி ஊராட்சிமன்றத் தலைவர், கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் புகழேந்தி இருந்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு பெற்ற நிலையில், இன்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் இன்று வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.