பைக்கில் சென்ற அதிமுக பிரமுகர்.. வழிமறித்து கொன்ற கும்பல்..!
கோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமையா மகன் பாலமுருகன் (40). கோவில்பட்டி நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக இருந்தார். இவர் வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர், திடீரென கரும்பை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த பாலமுருகன் கீழே விழுந்துள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் பாலமுருகனின் இடுப்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பாலமுருகனின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த பாலமுருகனுக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாலமுருகன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரமாக வேலை பார்த்து வந்தார். உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

