“நாற்பதும் நமதே முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம்” - பியூஷ் கோயல்
நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளது. பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 21 தொகுதிகள் இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்தார். முன்னதாக, அதிமுக-பாமக கூட்டணி உறுதியான நிலையில், தற்போது பாஜகவுடனான கூட்டணியும் உறுதியாகியுள்ளது.
கூட்டணி உறுதியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு மக்களவைத் தேர்தலை சந்திப்போம். மக்களவைத் தேர்தலை தொடர்ந்து 21 தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் தேர்தலை எதிர்கொள்வோம். அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மிகவும் இனிமையாக நடைபெற்றது” என்றார். பின்னர் தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோயல் பதிலளிக்க மறுத்துவிட்டார்.