நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு
புதுச்சேரியில் சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, என்.ஆர்.காங்கிரசும் அதிமுகவும் கடிதம் அளித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடருக்காக விரைவில் கூட உள்ளது. இந்நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கோரி, என்.ஆர். காங்கிரசும், அதிமுகவும் கடிதம் அளித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் இந்தக் கடிதத்தை அளிக்க, சபாநாயகர் அறைக்கு சென்றனர்.
அங்கு அவர் இல்லாததால் சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயரிடம் அவர்கள் கடிதத்தை அளித்தனர். சபாநாயர் சிவக்கொழுந்து நடுநிலைமையைப் பின்பற்றுவதில்லை என்றும், மரபுகளை மீறி கட்சி விழாக்களில் பங்கேற்பதாகவும் குற்றம்சாட்டி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவர்கள் கோரியுள்ளனர். புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.