“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..
பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் இடையே நிகழ்ந்த விவாதம் உறுப்பினர்களை கவர்ந்தது.
பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, இனிப்பு பெட்டிகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதை அச்சிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இது நல்ல விஷயம், அரசு நல்ல முடிவெடுக்கும் என முதலமைச்சர் பதில் அளித்தார். பின்னர் பேசிய பூங்கோதை ஆடி காற்றில் அம்மிக் கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போகும் எனக் கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தாது. இதெல்லாம் பேசுவீர்கள் என தெரிந்துதான் ஜெயலலிதா அனைத்து வீடுகளுக்கும் இலவச மிக்ஸி கொடுத்துவிட்டார் எனக் கூறினார். அதனால், ஆடிக் காற்றிலும் மம்மி ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கும் என்றும் ஜெயக்குமார் கூறியதை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.