கரூர் வழக்கு: நடந்தது என்ன ? வழக்கை விவரித்த ஆதவ்
கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து எல்லாரும் சொல்வது போல், நாங்கள் அங்கிருந்து தப்பித்து ஓடவில்லை; கரூர் பார்டரிலேயேதான் காத்திருந்தோம். காவல்துறையினர்தான் கலவரம் வரும், நீங்கள் வரவேண்டாம் என்றார்கள்" என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் சதி நடந்திருப்பதாக தவெக தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி, கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட புலனாய்வுக் குழுவையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும், அவருடன் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தவெக தலைவர் விஜய் நேரம் தவறி பரப்புரையில் ஈடுபட்டார் என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால், 3 மணி முதல் 10 மணி வரை என்ற காவல்துறையினர் கொடுத்த நேரத்திலேயே பரப்புரையில் ஈடுபட்டார். நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு, கரூருக்கு நுழைந்தபோது, கரூர் காவல்துறைதான் எங்களை வரவேற்றார்கள். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. அவர்கள்தான் குறிப்பிட்ட அந்த இடத்தில் நின்று பேச சொன்னார்கள். தவெக தலைவர் விஜய் அதன்பின் பேச ஆரம்பித்தார். அப்படி தவறுகள் இருந்தால், கரூர் காவல்துறை ஏன் மாவட்டத்திற்குள் எங்களை வரவேற்க வேண்டும்?
அந்த இடத்தை எந்தளவிற்கு Force பண்ணி எங்களுக்கு கொடுத்தார்கள் என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம். தமிழக அரசின் மீதும் தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று ஏன் சொல்கிறோம் என்றால், சம்பவம் நிகந்தபிறகு கரூர் பார்டரில், நான், ஆனந்த், நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோர் காத்துக்கொண்டிருந்தோம். காவல்துறைதான் கலவரம் வரும்.. நீங்கள் வரவேண்டாம் என்றார்கள். எங்களுடைய மொபைல் நெட்வொர்க்கை கூட செக் பண்ணலாம்.
திமுக அரசு திட்டமிட்டு தவெக-வினர் சம்பவ இடத்திற்கு வரக்கூடாது என ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத்தினரையும், மாவட்ட செயலாளர்களையும் தீவிரவாதிகளைப் போல் தடியடி நடத்தி அனுப்பினார்கள் என்பதையும் நாங்கள் பதிவு செய்தோம்” எனப் பேசினார்.
தொடர்ந்துப் பேசிய அவர், "சம்பவம் நடந்த முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்களும் மனிதாபிமானமுள்ள மனிதர்கள்தான். இதை பயன்படுத்திக்கொண்டு திமுக அரசு ஒரு பக்கமான செய்திகளை மட்டுமே வெளிவருமாறு பார்த்துக் கொண்டது. சமூக வலைதளங்களில் பேசியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு, இந்த சம்பவத்தை வைத்து ஒரு கட்சியை அழிக்கும் ஜனநாயகப் படுகொலையை திமுக அரசு செய்து வருகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும்" என்பது எனது நம்பிக்கை எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் முழு விபரங்களையும் கீழே காணலாம்.