`உறுதியளித்தபடி கவனித்து கொள்ளவில்லை’- முன்னாள் அமைச்சர் மீது துணை நடிகை குற்றச்சாட்டு
ராமநாதபுரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டு முன்பு நடிகை தர்ணாவில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது திரைப்பட துணை நடிகையான சாந்தினி என்பவர், கடந்த வருடம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். தனது அந்த குற்றச்சாட்டில் அவர், `கடந்த ஐந்து வருடங்களாக மணிகண்டனுடன் நான் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதன் காரணமாக, மூன்று முறை கர்ப்பமடைந்த நிலையில், மணிகண்டனின் நெருக்கடி காரணமாக அந்த கர்ப்பத்தைக் கலைத்துள்ளேன்.

மணிகண்டன் முதலில் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டார்' என்று போலீஸில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை அடுத்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும், பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பலமுறை அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தினி அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை சாந்தினி இன்று இராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டனின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றார். ஆனால், மணிகண்டனின் உறவினர்கள் அவரை விரட்டி அடித்ததால் கண்ணீருடன் வீட்டுக்கு எதிரே காரில் அமர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சிறிது நேரம் அழுது கொண்டே அங்கு அமர்ந்திருந்த அவர், அங்கிருந்து காரில் கிளம்பிச் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னிடம் கூறியபடி நடந்து கொள்ளாதால் அவரது வீட்டுக்கு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்